உலகில் ஃபேஸ்புக், இன்ஸ்டாவுல இந்த பதிவுகள் தான் அதிகமாம்! 86 சதவிகித அதிகரிப்பால் வருந்துகிறது மெட்டா நிறுவனம்!
நல்ல நிறுவனம் நடத்த வேண்டும்… நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசையிருக்காது? ஆனா, இருக்கிற நூறு சதவிகிதத்துல 86 சதவிகிதம் பேர் இப்படி செஞ்சா எப்படிப்பா? என வருந்துகிறது மெட்டா நிறுவனம். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரையும் ஒன்றிணைப்பதே சமூக ஊடகத்தின் நோக்கமாக இருந்தாலும், பிரிவினைவாதம், வெறுப்பு பேச்சுகள், வன்முறையை கொண்டாடும் பதிவுகள் போன்றவை அதிகளவில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் வெறுப்பு பதிவுகளின் அளவு 82 சதவீதம் அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வன்முறையை தூண்டும் பதிவுகள் 86 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மெட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 31-ம் தேதி அன்று மெட்டா வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஃபேஸ்புக் ஏப்ரல் மாதத்தில் 53,200 வெறுப்பு பதிவுகளை கண்டறிந்தது. இது மார்ச் மாதத்தில் கண்டறியப்பட்ட 38,600 வெறுப்பு பேச்சுக்களுடன் ஒப்பிடும்போது 82 சதவீதம் அதிகமாகும். இன்ஸ்டாகிராமில் மார்ச் மாதத்தில் 41,300 வன்முறையை தூண்டும் பதிவுகள் பதிவாகியிருந்தன. அது ஏப்ரல் மாதத்தில் 77,000 ஆக அதிகரித்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை நாங்கள் அளவிடுகிறோம். எங்கள் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் பதிவுகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று மெட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.