உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியின் கட்டணம் குறைப்பு…
பெரியவர்களுக்கு 150 ரூபாய் என இருந்த நுழைவு கட்டணம் 25 ரூபாய் குறைத்து 125 ரூபாயில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கலாம் என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் அறிவிப்பு…
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த பத்தாம் தேதி உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 126 ஆவது மலர் கண்காட்சி துவங்கியது.
இந்தாண்டு மலர் கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்டமான டிஸ்னி வேல்டு, 80 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயில், மிக்கி மவுஸ், தேனி உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 45 ஆயிரம் மலர் தொட்டிகளில் வண்ண, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து வருவதோடு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு 126 வது மலர் கண்காட்சியின் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 150 ரூபாய் என இருந்த நிலையில் 25 ரூபாய் குறைத்து 125 ரூபாய் எனவும் சிறியவர்களுக்கு 75 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்தாண்டு 126வது மலர் கண்காட்சியை சுமார் 82 ஆயிரத்து 835 பேர் கண்டு ரசித்து சென்றுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.