ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்காக கதவை இழுத்து பூட்டிய காவல்துறையினர் டி என் பி எஸ் சி தேர்வு எழுத முடியாமல் சாலை மறியலில் ஈடுபட்ட தேர்வர்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு இன்று துவங்கியது.
அதன்படி மயிலாடுதுறை வட்டத்தில் 11470, குத்தாலம் வட்டத்தில் 2660;, சீர்காழி வட்டத்தில் 7340 மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் 2440 என மயிலாடுதுறை மாவட்டத்தில் 77 மையங்களில் 23910 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.இதற்காக தேர்வு எழுத வரும் தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என்றும் ஒன்பது மணிக்கு மேல் வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது.
பேருந்து கால தாமதமாக 8.35மணிக்கு வந்தவர்களையும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்துவிட்டனர்.
ஒன்பது மணி வரை உள்ளே அனுமதிக்கலாம் என்ற அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி தாமதமாக வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பலன் இல்லாத காரணத்தால் 50க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.