ஓசூர் அருகே 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த கூறி விவசாயி மொபைலுக்கு வந்த குறுஞ் செய்தியால் அதிர்ச்சி. மின்வாரிய அலுவலகத்தில் புகார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி, கிராமத்தில் வசித்து வரும் விவசாயி வீட்டு மின் கட்டணமாக 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த சொல்லி அவரது மொபைல் போனுக்கு வந்த குறுஞ் செய்தியால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணத்தை சரி செய்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
சின்னட்டி கிராமத்தில் சுமார் மூன்று தலைமுறைக்கு மேல் வசித்து வருபவர் விவசாயியான வெங்கடேஷ். இவரது வீட்டில் அதிகபட்சமாக ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில் அதில் பெரும்பாலானவர்கள் விவசாய தொழில் நிமித்தமாக வெளியே சென்று விடுவது வழக்கம்.
தமிழ்நாடு அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதால் பெரும்பாலும் மின்கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இன்றி இருந்துள்ளார்.
மேலும், இது நாள் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவரது வீட்டு மின் கட்டணமாக அதிகபட்சமாக 100 ரூபாய் வரை மட்டுமே செலுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது மொபைல் போனுக்கு மின்வாரியத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும் மின் கட்டணமாக இவரது வீட்டு மின் நுகர்வோர் இணைப்பு எண்ணிற்கான, கட்டணமாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 550 ரூபாய் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டு வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் தனது மின் கட்டணத்தை முறையாக சரி செய்து தருமாறு மின்வாரிய அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.