ஓமலூரில் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருந்து தனது முதல் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றிய 78 வயது முதியவரை பாராட்டிய தேர்தல் அலுவலர்கள்.
சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளில் இன்று காலை சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவானது துவங்கியது.
மேலும்,வாக்குப்பதிவிற்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரம் பூத் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு,சரி பார்க்கப்பட்டது.பின்னர் வாக்கு பதிவானது துவங்கி தொடர்ந்து நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சிசிடிவி கேமரா மூலம் வாக்குப்பதிவானது கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிப்பதற்கு உதவியாக சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளில் 26 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துணை ராணுவத்தினர் மட்டும் உள்ளூர் காவல்துறையினர் மூலம் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அமைதியான முறையில் வாக்குப்பதிவானது நடைபெற்று வரும் நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இதில் குறிப்பாக காலை 7 மணிக்கு ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு துவங்கியதும் முதல் வாக்காக தனது வாக்கை பதிவு செய்த ஓமலூர் பகுதியை சார்ந்த 78 வயது முதியவர் கதிர்வேலுக்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.