ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…

இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஓமலூர் பகுதியில்,அவர் வாக்கு சேகரித்தார். அப்போது ஓமலூர் கடைவீதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வாக்கு சேகரிக்க வந்த டி.எம். செல்வ கணபதிக்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும்,கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஓமலூர் கடைவீதி, அக்ரஹாரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு திறந்தவெளி பரப்பரை வாகனத்தில் சென்ற டி.எம். செல்வகணபதி பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருவதாகவும், ஜி எஸ் டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதிப்பதாக கூறினார்.
மத்திய அரசு நிலையற்ற கொள்கைகளினால்,ஒரு பவுன் தங்கம் 50,000 கடந்து சென்று விட்டதாகவும் கூறினார்.
மேலும் மோடி திடீரென 100, 500 ரூபாயை கூட தடை செய்து விடுவார் என்றும், எடப்பாடி பழனிச்சாமி மோடியுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
. பேருந்து நிலையத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது பொதுமக்களில் சிலர் அவரிடம் செல்பி எடுக்க முண்டியடித்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும்,பரப்புரை நிறைவுற்ற நிலையில்,பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.