ஓமலூர் அருகே உணவு, தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து.

உயிரிழந்த மானை கயிறு கட்டி கிணற்றில் இருந்து வனத்துறையினர் மேலே இழுத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேர்வராயன் மலை பகுதியை ஒட்டி நூற்றுகணக்கான கிராமங்கள் உள்ளது. சேர்வராயன் வனப்பகுதியில் மான் காட்டுப்பன்றிகள், காட்டெருமை, முயல், மயில், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது.
தற்போது பல மாதங்களாக மழை பொழிவின்றி வனப்பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் வனப்பகுதியில் வாழக்கூடிய வன விலங்குகள், உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓமலூர் அருகே உள்ள சர்க்கரை செட்டியப்பட்டி கிராமம் தொப்பளான் காட்டுவளவு பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாயி ரத்தினம் என்பவர் கிணற்றில் தண்ணீர் எடுத்து விட்டுள்ளார். அப்போது கிணற்று தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் விவசாயி ரத்தினம் கிணற்றை எட்டி பார்த்துள்ளார்.
அப்போது கிணற்றுக்குள் பெரிய மான் ஒன்று இறந்து கிடந்ததைப் கண்டுள்ளார். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சேலம் தெற்கு வன சரகர் துரைமுருகன் உத்தரவின் பேரில் வனவர் பழனிவேல் வன காவலர் பாரதி, வனகாப்பாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் கிணற்றில் இறந்து கிடந்த மானை கயிறு கட்டி கிணற்றில் இருந்து வனத்துறையினர் மீட்டனர்.
மேலே கொண்டு வரப்பட்ட மான் பெரிய அளவில் அழகிய கொம்புகளுடன் இருந்தது. இது பற்றி தகவல் அறிந்த நூற்றுகணக்கான பொது மக்கள் இறந்து கிடந்த மானை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் மான் இறந்து சுமார் மூன்று நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கும் என்பதால் மிகவும் துர்நாற்றம் வீசியது. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் கவிதாவிற்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர் கவிதா மானை பிரேத பரிசோதனை செய்தார்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மானை வனத்துறையினர் பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர். உணவு தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து இறப்பதும், நாய்கள் விரட்டி சென்று கடிப்பதால் ஏற்படும் இறப்பு களை தடுக்கவும் வறட்சி காலங்களில் வன விலங்குகளுக்கு உணவு தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.