கடலூர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்த ஆணையர்!
கடலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சாக்கடைக்குழியில் இறங்கி சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாநகர ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஆணையர் உத்தரவிட்டார் .
கடலூர் மாவட்டம், கடலூர் மாநகராட்சியில் சாக்கடை குழியில் தூய்மை பணியாளர் இறங்கி சுத்தம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இதில் தற்போது 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இயந்திரத்தின் உதவியுடன் ஒப்பந்ததாரர் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் 4வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தெருவில் வழிந்தோடி உள்ளது. இதையடுத்து அங்கு சுத்தம் செய்ய சென்ற பாதாள சாக்கடை ஒப்பந்த ஊழியர்கள் சாக்கடைக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்துள்ளனர்.
இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது .
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார் .
இதையடுத்து பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த நிகழ்வு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு கடந்த 10 நாட்களுக்கு முன் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் ஒப்பந்த பணியாளர்கள் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தது உறுதியானது .
இதை தொடர்ந்து உரிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஆபத்து ஏற்படும் வகையில் சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளரை ஈடுபடுத்திய ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்து உத்திரவிட்டார் .
இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் ஆணையரை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் இது சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் செய்தி சேனலில் ஒளிபரப்பு செய்ததால் செய்தியாளர் வீட்டுக்கே சென்று ஒப்பந்ததாரர் உட்பட 30 பேர் அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ராஜாராம் அவர்களை சந்தித்து பத்திரிக்கையாளர்கள் முறையிட்டனர். அதற்கு கண்காணிப்பாளர் இனி வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என உத்தரவாதம் கொடுத்தனர். அந்த செய்தியாளரின் இல்லத்துக்கு முன் கூடிய தூய்மை பணியாளர்கள் மற்றும் அந்த ஒப்பந்ததாரர் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் பதட்டம் சுமார் இரண்டு மணி நேரத்தில் தணிந்தது குறிப்பிடத்தக்கது.