கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தமிழகத்திற்கு பிரதமர் மோடி செய்த திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு புகைப்பட ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்
.
கரூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி, பெருமாள் பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவருக்கு, கட்சி நிர்வாகிகள் கணக்கம்பட்டி சித்தர் புகைப்படத்தை பரிசாக வழங்கினர். சித்தர் புகைப்படம் முன்பு மண்டியிட்டு ஆசி பெற்ற பின் புகைப்படத்தை வேட்பாளர் செந்தில்நாதன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.
அப்போது திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்த செந்தில்நாதன்,
மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் செய்யவில்லை என்று தொடர்ந்து, தமிழக அரசு கூறுகின்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, பிரதமர் மோடி செய்த திட்டங்களை பட்டியலிட்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் கோடிகளில் நடைபெற்ற திட்ட பணிகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்துள்ளார் என்றும், அதற்கான புகைப்பட ஆதாரங்களை சுட்டிக்காட்டி பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.