காட்பாடியில் பொதுமக்களுக்கு கோடை வெயிலை தணிக்க இலவச நீர் மோர் வழங்கிய தம்பதியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளி மலை கூட்டுரோட்டில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். இந்த பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் காட்பாடி மாநகரவாசிகள் என அதிகமாக மக்கள் கூடுவதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு கோடை வெயிலை தணிக்கும் வகையில் தாக சாந்தியை ஏற்படுத்தும் வகையிலும் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த அச்சுதன் -அமுதா தம்பதியினர் சுமார் 3000 லிட்டர் ஐஸ் கலந்த நீர் மோரை இலவசமாக நண்பகல் நேரத்தில் விநியோகம் செய்தனர்.
இதனை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றோர், நான்கு சக்கர வாகனங்களில் சென்றோர், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் என அனைவரும் வாங்கி பருகிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கோடை வெயில் சுட்டெரித்து வரும் வேளையில் பொதுமக்களுக்கு தாகசந்தியை ஏற்படுத்திய அச்சுதன்- அமுதா தம்பதியினரை பொதுமக்கள் மனதார வாழ்த்தினர்.