காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் கட்டப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்படுவது எப்போது?

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேர்க்காட்டில் 350 படுக்கைளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா காண தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையை திறப்பது எப்போது? மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக இந்த பகுதி கிராமப்புற பகுதியாகவும், மருத்துவமனையைச் சுற்றியும் அதிக அளவில் கிராமப்புற பொதுமக்கள் வசித்து வருவதாலும் மருத்துவ வசதி அத்தியாவசியமாக மாறிவிட்டது. இதனால் மருத்துவ வசதி தேவைப்படுவோர் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதனால் அதிக நேரம் செலவாகிறது. அலைச்சலும் அதிகரிப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வேலூரில் பென்ட்லேண்ட் மருத்துவமனை செயல்படத் தொடங்கிய போதும் கிராம மக்கள் இங்கு செல்வதில்லை.
பொதுமக்களின் வசதிக்காகவும் அவர்கள் சிரமமின்றி மருத்துவ வசதி பெறவும், அவர்கள் நலமோடு வாழவும் எண்ணிய திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சேர்க்காட்டில் இப்படி ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டி முடித்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த மருத்துவமனையை விரைந்து திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக ஒட்டுமொத்த வேண்டுகோளாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு விரைந்து இந்த மருத்துவமனையை திறக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.