காட்பாடி சமீரா கார்டனில் கழிவு நீரை மழை நீர் வாய்க்காலில் வெளியேற்றும் குடியிருப்பு வாசிகள்: தொற்று நோய்கள் பரவு அபாயம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அடுத்துள்ளது சமீரா கார்டன். இந்த சமீரா கார்டனில் சுமார் 200 வீட்டுமனைகள் உள்ளன. இதில் தற்போது 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு இதில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் குடியிருப்பு பகுதியில் உபயோகிக்க கூடிய கழிவு நீரை கொண்டு வந்து குழாய்கள் மூலம் இந்த குடியிருப்பு பகுதியை ஒட்டிச் செல்லும் மழைநீர் கால்வாயில் கொண்டு வந்து விடும் தொடர்ந்து நிலவுகிறது.
ஒருவர் கூட அவர்கள் வீட்டுக்கு அருகில் உறை இறக்கி கழிவு நீரை கொண்டு செல்லவே இல்லை. இதனால் மழைநீர் கால்வாய் (ஓடை) கழிவு நீர் செல்லும் கால்வாயாக உருமாறி விட்டது. 18 அடி அகலமான மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக 4 அடியாக சுருங்கி விட்டது. ஒருபுறம் சாலை அமைக்க ஆக்கிரமிப்பு மறுபுறம் வீட்டுமனை போட்டவர்களே ஆக்கிரமிப்பு செய்து மனையாக்கி விற்பனை செய்துள்ளனர்.
இதனால் மழைக்காலத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் வழிந்து கிறிஸ்டியான்பேட்டை ஊருக்குள் சென்று விடுகிறது. கழிவு நீர் என்பதால் துர்நாற்றம் வீசும் நிலை நிலவுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நிலை உள்ளது. தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுத்து பார்த்த பொதுமக்கள் பொங்கி எழ ஆரம்பித்து விட்டார்கள்.
போர்க்கால அடிப்படையில் இந்த வாய்க்காலை 18 அடி அகலம் கொண்டதாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.