காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடக்கம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) (19:06:2024) தேதி காலை தொடங்கியது. வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.க.கவிதா தலைமை வகித்தார். காட்பாடி வட்டாட்சியர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் செந்தில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வாசுகி, மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார், தேர்தல் பணி துணை வட்டாட்சியர் ஆர்.சுகுமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
ஜமாபந்தியில் காட்பாடி, தாராபடவேடு, தண்டல கிருஷ்ணாபுரம், காங்கேயநல்லூர், கழிஞ்சூர், விருதம்பட்டு, ஜாப்ராபேட்டை, தலையாரம்பட்டு, உண்ணாமலை சமுத்திரம், வண்டறந்தாங்கல், சேனூர், கரசமங்கலம், செம்பராயநல்லூர் ஆகிய ஊர்களுக்கு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அவர்களது குறைகளை மனுக்கள் மூலம் எழுதி கொடுத்தனர். அதற்கு மிக விரைவில் உங்கள் குறைகள் தீர்த்து வைக்கப்படும் என கோட்டாட்சியர் கவிதா தெரிவித்தார்.
அத்துடன் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் உள்ள செங்குட்டை பாரதியார் தெருவில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பொதுமக்களுக்கு இதுவரையில் அரசு பட்டா வழங்கவில்லை என்று மாநகராட்சி 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.அன்பு வேலூர் கோட்டாட்சியர் கவிதாவிடம் தெரிவித்தார். அதற்கு மேலதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக விரைவில் பட்டாக்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.