காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அதேபோன்று செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்துடன் வடை மாலை சாத்தியும், வெற்றிலை மாலை சாத்தியும் பக்தர்கள் ஸ்ரீபக்த ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதற்கு முன்னர் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
இதையடுத்து மலர்களாலும், துளசியாலும், தங்கக் கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையடுத்து பக்தர்கள் வடைமாலை சாத்தியும், வெற்றிலை மாலை, துளசி மாலை சாத்தியும் தொடர்ந்து வழிபட்ட வண்ணமாக இருந்தனர். தொடர்ந்து நாள் முழுவதும் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.
பூஜையில் திரளாக கலந்து கொண்டனர் பக்தர்கள். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சந்திர கிராணம் என்பதால் முற்பகல் 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
மாலை தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை வழக்கம் போல கோயில் நடை திறக்கப்பட்டு காலை 7.30 மணிக்கு திருமஞ்சனம் செய்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவர்.
பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகு விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.