கிரீடம் / கண்ணாடி வளையல் / வண்ண புத்தாடைகள் சகிதம் தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்.
மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி , சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில், சர்வதேச செவிலியர் கவுன்சில் அமைப்பு, 1965-ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடியது. தங்களைக் காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் நைட்டிங்கேலைக் கவுரவித்தனர். அதனால்தான் அவர் “கைவிளக்கு ஏந்திய காரிகை” என்றும் அழைக்கப்பட்டார்.
ஒரு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள், வண்டி தள்ளுபவர்கள், ஓட்டுநர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கிளினிக்கல் மேனேஜர்கள், மருத்துவர்கள் என ஏராளமானவர்கள் பணிபுரிந்தாலும் செவிலியர்கள்தான் மருத்துவமனையின் தேவதைகள். செவிலியர்கள் இல்லை என்றால் எந்த ஒரு மருத்துவமனையும் இயங்காது . பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக நாள் முழுவதும் பணி செய்துவரும் செவிலியர்களின் பணியானது மகத்தான ஒன்று. நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவர்களுக்குச் செய்யும் பணியைத் தங்களது கடமையாகக் கருதி, எந்தக் காலத்திலும், நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு இருந்தாலும் செவிலியர்களைப் பொறுத்தவரை நோயாளிகள் அவர்களுக்கு நோயாளிகள் தான் . சில நேரங்களில் மருத்துவர்களை விட செவிலியர்களின் பணி மிக முக்கியமானது. அவர்கள் மருத்துவமனைகளிலும், மருத்துவர் அலுவலகங்களிலும், சமுதாய நலக் கூடங்களிலும் பணிபுரிகிறார்கள். நோயாளிகள் வெளியே வர முடியாவிட்டால் வீட்டிற்கே சென்று வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் அன்பாக பேசுவதன் மூலமும், தேவையான உதவிகளை செய்வதன் மூலமும், எதுவும் தவறாக நடக்காது என்பதை கவனமாக கூறுவதன் மூலமாகவும் மருத்துவர்களை விட தான் செவிலியர்கள் தான் மக்களோடு மிக நெருக்கமானவர்கள். அறுவை சிகிச்சையின் போது அவர்களின் பணி இன்றியமையாதது. குழந்தை பிறப்பின்போது அவர்களின் கவனிப்பு, தாயைப் போன்று அன்பு காட்டுபவர்கள். குழந்தை பிறந்த பின்பு அவர்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுப்பது,குளிப்பாட்டுவது மற்றும் தாய் சேய் நலத்தில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். கொள்ளை நோய்கள் வரும்போது வீட்டிற்கே செல்லமுடியாமல் மிகத் துரிதமாக செயல்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி உதவி செய்வார்கள் . செவிலியர்கள் நமக்கு மற்றொரு தாய் மற்றும் சகோதரி. அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது . மற்ற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு கிடைக்காத சிறப்பு வெள்ளை உடை உடுத்தி தேவதைகளாக வலம் வரும் செவிலியர்களுக்கு மட்டும் உண்டு.
இந்நிலையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் , மக்களை தேடி மருத்துவம் திட்ட களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . தஞ்சை கல்லுகுளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் சுபாஷ் காந்தி தலைமையில் ஊர்வலமாக வந்த செவிலியர்களை அறக்கட்டளை நிர்வாகிகள் பூக்கள் தூவி சந்தானம் – குங்குமம் – கல்கண்டு – பூக்கள் சகிதம் பன்னீர் தெளித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
செவிலியர்கள் தான் நடமாடும் தேவதைகள் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு செவிலியரையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு தலையில் கிரீடம் அணிவித்து , கைகளில் கண்ணாடி வளையல்களை அணிவித்து வண்ண புத்தாடைகளையும் வழங்கி அழகு பார்த்தனர்.
மேலும் தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் சுபாஷ் காந்தி , மருத்துவர் முத்துக்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் , செவிலியர்களுக்கு ப்ரெட் அல்வா – சிக்கன் பிரியாணி – சிக்கன் கிரேவி – முட்டை – தயிர் சாதம் – ஐஸ்க்ரீம் சகிதம் அசைவ மதிய விருந்தை பரிமாறினார்கள்.
செவிலியர்கள் வெண்ணிற தேவதைகள் என்பதை வாய் வார்த்தையால் மட்டுமல்லாமல் தேவதைகளாகவே அலங்கரிக்கப்பட்ட நிகழ்வு தஞ்சை செவிலியர்கள் மனதில் மகிழ்வை ஏற்படுத்தியது . தங்களுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடம் / கண்ணாடி வளையல்கள் சகிதம் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சோதியா அறக்கட்டளை செயலளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி , தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.