குடியாத்தத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
குடியாத்தம் ராஜகணபதி நகர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே அந்த பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி, புதியதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை 25 மீட்டர் தூரமே உள்ளதாகவும் அருகாமையில் ரோட்டரி மருத்துவமனை 50 மீட்டரில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இடத்தை சுற்றி ஜே. ஜே. நகர் ,பெருமாள் நகர், ராகவேந்திரா நகர், சுண்ணாம்புப்பேட்டை, ராஜ கணபதி நகர், திருமலை கார்டன் போன்ற அனைத்து குடியிருப்புகளும் உள்ளன. மேலும் மேல்ஆலத்தூர் செல்ல புதிய ஒரு வழிப்பாதை ஆற்றை கடந்து செல்ல அமைத்து வருவதால் போக்குவரத்து மிகுந்த பகுதியாகவும் உள்ளது. எனவே குடியிருப்புகளுக்கு மற்றும் பள்ளி மருத்துவமனைக்கு அருகில் அமைக்கப்படும் இந்த புதிய டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் சௌந்தரராஜனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட நகர மன்ற தலைவர் சௌந்தரராஜன அரசின் பார்வைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.