குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் ஆலங்கட்டி மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து தற்போது 111 மற்றும் 110 டிகிரி என உச்சபட்ச நிலையை தொடர்ந்து எட்டியது. இதனால் அனல் காற்று வீச தொடங்கியது.
இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் பொதுமக்கள் நடமாட்டமும் சாலைகளில் வெகுவாக குறைந்து காணப்பட்டது .இதனால் நன்கு மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும் சாலைகள் கூட மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பகல் நேரங்களில் அனல் காற்று வீசத் தொடங்கியதால் பொதுமக்கள் படிப்படியாக வெளியில் வருவதை தவிர்த்துக் கொண்டனர் .இதனால் வீடுகளில் தஞ்சம் புக ஆரம்பித்தனர். இந்நிலையில் 110 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான போதும் பிற்பகல் திடீரென மேகமூட்டமும், பலத்த காற்றும் வீச ஆரம்பித்தது. இதையடுத்து திடீரென குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பக் காற்றில் புழுவாய் துடித்து வந்த பொதுமக்கள் சில்லென்று குளிர்ந்த காற்று வீசியதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பறவைகள் மற்றும் விலங்குகளும் மழை பெய்ததால் சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.