குற்றால மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ‘ சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.
தென்காசி – செய்தியாளர் – கிருஷ்ணகுமார்.
மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் கனமழை – குற்றால மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ‘ சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சுற்றுலா ஸ்தலமான குற்றாலம்.
இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதம் சீசன் கலைக்கட்டி காணப்படும்.
அப்போது தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் என லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ்வர்.
இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் புனித நீராடிய பின்னரே சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்கள் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றாலத்தில் அலை மோதும்.
தற்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும் நிலையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிவித்துள்ள ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று வருகின்றனர்.
இதனால் குற்றால அருவிகளின் புனித நீராடுவதற்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றனர்.
நேற்று மாலை வரையில் அருவியில் குறைந்தளவே தண்ணீர் விழுந்தது.
இந்நிலையில் இரவு மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய வளைவை கடந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஐய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.