சங்ககிரியில் செயல்படாத சிசிடிவி கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்ககிரி புது பஸ் ஸ்டேண்ட், இடைப்பாடி பிரிவு, திருச்செங்கோடு பிரிவு, பவானி பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த இரு ஆண்டுக்கு முன் தனியார் பங்களிப்புடன் 1.5 லட்ச ரூபாய் மதிப்பில் 35 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அதை சரியாக பராமரிக்காத காரணத்தால் கேமராக்கள் ஆங்காங்கே கவிழ்ந்த நிலையில் உள்ளன பல கேமராக்கள் பழுதின் காரணமாக செயல்படாமல் உள்ளது.
சங்ககிரியில் லாரி தொழில் பிரதானமாக உள்ளது.மேலும் போலீஸ் துறை அலுவலகங்கள் மற்றும் கோர்ட், வருவாய்துறை அலுவலகங்கள் உள்ளன.மேலும் சங்ககிரிக்கு தினமும் 300 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர் இதனால் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.மேலும் குடிமகன்கள் தொந்திரவு அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன.
தற்போது பல இடங்களில் கேமரா பழுதானதாக உள்ளதால் கடந்த ஆண்டு இடைப்பாடி சாலை அருகே உள்ள தெலுங்கர் வீதியில் நடந்த ஏ.டி.எம்.,உடைத்த சம்பவத்தில் திருடர்களை பிடிப்பதில் பெரும் சவாலாக இருந்தது.எனவே அதிக எண்ணிக்கையில் கேமரா பொருத்தவும், பழுதான கேமராக்களை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.