சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு
சங்ககிரியில் ப்ரொஜெக்டர் மூலம் உதயசூரியன் சின்னத்தை ஒளிபரப்பி நூதன முறையில் திமுகவினர் ஓட்டு சேகரிப்பு அனுமதி பெறாததால் அதிகாரிகள் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர் அதனால் பரபரப்பு ஏற்பட்டது…..
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அதனைத் தொடர்ந்து சங்ககிரி பகுதியில் திமுகவினர் பல்வேறு நூதன முறையில் மக்களை கவர்ந்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சங்ககிரி பச்சக்காடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அலுவலக வளாகம் முன்பு ப்ரொஜெக்டர் இயந்திரம் மூலம் தூரத்தில் இருந்து பார்த்தாலும் உதயசூரியன் சின்னம் தெரியும்படி ஒளிபரப்பினர். இந்த தகவல் பாஜக கட்சியினருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சங்ககிரி பச்சக்காட்டில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். அதனையடுத்து அந்த இயந்திரம் குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். உடனே பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஒளிபரப்பி இயந்திரத்தை கைப்பற்றி சங்ககிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.