BREAKING NEWS

சங்ககிரியில் வலுவிழந்து வரும் சுகாதார நிலையம்: பரிதவிக்கும் கர்ப்பிணி பெண்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு கஸ்தூரிப்பட்டியில் கடந்த 1992 ஆம் ஆண்டு துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது.

இங்கு மூலக்காட்டானூர், கட்டையனூர், பொன்னையாகாடு, செட்டிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்வதற்காகவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காகவும் வந்து செல்கின்றனர். இங்கு மாரியம்மாள் என்ற செவிலியர் தங்கி கடந்த 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது கட்டிடம் வலுவிழுந்து வருகிறது. அதன் மேல்தள மேற்கூரையில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. அத்துடன் கட்டடத்தின் சுற்றி பல இடங்களில் சுவர்கள் சேதமாகி விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

மழைக்காலங்களில் அதன் வழியே தண்ணீர் கசிந்து காரை பெயர்ந்து விழுவதால் ஸ்திரத்தன்மை குறைய தொடங்கியுள்ளது.

அதனால் கட்டிடம் எப்போது விழும் என்ற அச்சத்தில் பணி புரிந்து வரும் செவிலியர் மற்றும் வைத்தியம் பார்க்க வரும் கர்ப்பிணிகள் உள்ளனர். இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால் போர்க்கால அடிப்படையில் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கஸ்தூரிபட்டி துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது.

இதனால் கட்டிடங்கள் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஜன்னல், கதவுகள் இல்லை. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இங்கு பணிபுரியும் மாரியம்மாள் என்ற செவிலியர் இன்னும் இரண்டு மாதத்தில் பணி ஓய்வு பெறுவார். அதற்கு பிறகு கட்டிடம் சரியில்லாததால் இங்கு யாரும் பணிபுரிய வர மாட்டார்கள்.

அதனால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் மருந்து மாத்திரை வாங்க வருபவர்கள் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வடுகப்பட்டி சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே மாவட்ட அதிகாரிகள் உடனடியாக கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

CATEGORIES
TAGS