சினிமா
’மன்மத லீலை’யில் ஏன் நடித்தீர்கள் என கேட்டார்கள்: அசோக் செல்வன்.
“ ’மன்மத லீலை’ படத்தில் ஏன் நடித்தீர்கள் என பலர் கேட்டார்கள்” என்று நடிகர் அசோக் செல்வன் தெரிவித்தார்.
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரித்துள்ள படம் ’மன்மத லீலை’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக, நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. அதை நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி முருகன் பெற்றுக்கொண்டார்.
அசோக் செல்வன் பேசும்போது, “கரோனா நேரத்தில் பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை பண்ணலாம் என்று வெங்கட் பிரபு சொன்னார். நடுவில் எனக்கு கரோனா வந்து போனது. இந்தப் படத்தில் ஏன் நடித்தீர்கள் என்று பலர் கேட்டார்கள். இந்தப் படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் நல்ல படம்” என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு, “என் உதவியாளர் மணிவண்ணனின் கதை இது. கரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்றபோது இந்தக் கதை வந்தது. அருமையான கதை. அசோக்கை, கரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதையை சொன்னேன். உடனே செய்யலாம் என்றார். இது, கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியான படமாக இருக்கும்” என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.