சினிமா
சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு.
சமந்தா நடித்துள்ள ‘ஷாகுந்தலம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று வெளியானது.
புராணக் கதையான ‘சகுந்தலை’ திரைப்படமாக தயாராகி இருக்கிறது. விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்தவர் சகுந்தலை. இவரும் துஷ்யந்த மகாராஜாவும் காதலிக்கிறார்கள். துருவாச முனிவர் சாபத்தால் அந்த காதலை துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி துஷ்யந்தனுடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது புராணக் கதை. இதை மையமாக வைத்து ஷாகுந்தலம் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன், துஷ்யந்தனாக நடிக்கிறார். அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கபீர்பேடி உட்பட பலர் நடிக்கின்றனர். மணி சர்மா இசை அமைக்கிறார். குணசேகர் இயக்குகிறார். இவர், அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ’ருத்ரமா தேவி’, மகேஷ்பாபு நடித்த ‘ஒக்கடு’, ’அர்ஜுன்’, ’சைனிகுடு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
குணா டீம் ஒர்க்ஸ் நிறுவனம், தில் ராஜூ புரொடக்ஷனுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதில், மான்கள் மற்றும் மயில்களுக்கு நடுவே, நடிகை சமந்தா ஒரு பாறையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய இந்த முதல் தோற்ற போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.