சினிமா
அஜித் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான வலிமை திரைப்படம் முதல் நாளில் ரூ. 36 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச் . வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், ஹூமா குரேஷி, புகழ் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். யுவன் பாடல்கள் அமைக்க, ஜிப்ரான் பின்னணி இசை அமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நேற்றைய (பிப்ரவரி 25) தினம் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
சுமார் இரண்டரை ஆண்டுகளாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்துள்ளது. ஹாலிவுட் தரத்திலான சண்டைக்காட்சிகள், அம்மா சென்டிமென்ட் என படம் வெகு சிறப்பாக உள்ளதாக பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ‘வலிமை’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 36 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதுவரையிலுமான அஜித் படங்களிலேயே மிகப்பெரிய முதல்நாள் வசூல் இது எனவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் இந்திய அளவில் 76 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது ரஜினியின் முதல்நாள் பட வசூலை முறியடித்துள்ளதாக கூறப்படுவதால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.