சினிமா
வடிவேலு உடன் ஜோடி சேரும் ‛பிக்பாஸ்’ ஷிவானி. நாய் சேகர் ரிட்டனில் புதிய ரொமான்ஸ்!
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்க வந்துள்ள வைகைப் புயல் வடிவேலு, நாய் சேகர் என்கிற படத்தில் நடிப்பதாக இருந்தது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் வரவிருந்த இந்த படத்திற்கான தலைப்பை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து காமெடி நடிகர் சதீஷ் நடித்த படத்திற்கு சூட்டியிருந்தனர். அந்த தலைப்பை பெற லைக்கா பல வகைகளில் முயன்றும், ஏஜிஎஸ் நிறுவனம் அதை தர மறுத்து படத்தையும் வெளியிட்டது.
ஆனால், படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இதற்கிடையில், வடிவேலு நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டு, லண்டனில் படப்பிடிப்பை தொடங்கினர். இதற்கிடையில் அங்கிருந்து ஊர் திரும்பி வடிவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். மீண்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், யார் கதாநாயகி என்கிற சஸ்பென்ஸ் நிலவி வந்தது. லண்டனில் வைத்து ஹீரோயின்களை தேடும் படலம் நடந்து வந்தது. சிலர் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயண், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், வடிவேலு உடன் அவர் இணைந்து நிற்கும் போட்டோ இடம் பெற்றுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் தான் நடிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷவானி விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது வடிவேலு உடன் ஜோடி சேர்ந்துள்ளது, பலரின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. வடிவேலு மாதிரியான கலகலப்பான கதாபாத்திரத்துடன், ஜில்லென ஜிகர்தண்டா மாதிரி ஷிவானி சேரும் போது, ஸ்கிரீன் இன்னும் ஜில்லென ஆகும் என்பதால், படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.