சென்னை பெண் குடியாத்தம் அருகே கழுத்தை அறுத்து படுகொலை!

சென்னை புளியந்தோப்பு கனிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சிவகாமி. இவர்களின் இரண்டாவது மகள் தீபா (33 ). தீபாவிற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மல் என்பவருடன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு கணவரை தீபா விவாகரத்து செய்தார்.
இதனை தொடர்ந்து தீபா பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் செல்வதாக கூறிவிட்டு தீபா சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து தீபாவின் பெற்றோர்கள் கடந்த 16ஆம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என்பது குறித்து புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குடியாத்தம் அடுத்த நெட்டேரி மலையில் தீபா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹேமந்த் ராஜ் என்பவரை புளியந்தோப்பு போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து போலீசார் ஹேமந்த்ராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.