ஜெயங்கொண்டம் அருகே மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவன்,ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்.
தமிழ்நாட்டில் நடிகைகளுக்குத்தான் கோயில் கட்டி பார்த்திருக்கிறோம். கட்டிய மனைவியை கொடுமை படுத்தியும், குடிபழக்கத்தால் பெற்ற பிள்ளைகளுக்கு கூட உணவு அளிக்காத இக்காலத்தில், இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவருவது ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தேவாமங்கலம் காந்தி நகரை சேர்ந்த பாலையா- சிவனேஸ்வரி தம்பதியரின் மகன் கோபாலகிருஷ்ணன்(42) இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி(36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த இவர்களுக்கு, தற்போது 5 வயதில் கோமகன் என்ற மகனை ஈன்றெடுத்து, வாழ்க்கை என்னும் படகில் மகிழ்ச்சியோடு பயணம் மேற்கொண்ட கோபாலகிருஷ்ணன் வாழ்வில் அப்போதுதான் அந்த இடி விழுந்தது.
ஆம்! கற்பகவல்லிக்கு கிட்னி செயல் இழந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆசை மனைவியை காப்பாற்றுவதற்காக கோபாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களுக்குச் சென்று அலையாய் அலைந்து மருத்துவம் பார்த்தார். பல லட்சம் செலவு செய்தும், டாக்டர்களும் ஒரு கட்டத்தில் கை விரித்து விட்டனர். இதில் வேதனை அடைந்து சோர்ந்து போன கோபாலகிருஷ்ணன் போராடுவதை விடவில்லை. தனக்காக கணவன் படும் வேதனையை அறிந்த கற்பகவல்லி ஒரு கட்டத்தில் இனிமேல் எனக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம், விட்டு விடுங்கள் நான் போய் சேர்கிறேன். நான் போய் சேர்ந்தால் என்னை மறந்து விடுவீர்களா என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதில் நிலைகுலைந்த கோபாலகிருஷ்ணன், அப்படியெல்லாம் உன்னை விட்டு விடுவேனா? எப்பேற்பட்டாவது, உன்னை காப்பாற்றியே தீருவேன். நீ என் குல சாமி.
உன்னை நாங்கள் மறக்க மாட்டோம், உனக்காக நான் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவேன். உன்னை சாமியாகத்தான் நாங்கள் பார்ப்போம்! என்று கோபாலகிருஷ்ணன் கண்ணீர் மல்க கூறி ஆசை மனைவியிடம் சத்தியம் செய்திருக்கிறார்.ஆனாலும் இயற்கை விடவில்லை. கற்பகவள்ளியை அழைத்துச் செல்லும் நேரம் வந்தது. ஆம்!கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி கற்பகவல்லிக்கு மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இயற்கை மரணம் அடைந்தார்.
மனைவி இறந்த துக்கத்தில் மீளா துயரத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன், தனது வீட்டின் அருகில் உள்ள சொந்த நிலத்திலேயே மனைவியை நல்லடக்கம் செய்தார். மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரிடம் சொன்ன சத்திய வார்த்தைகள் காதில் ஒலித்தன. இதனை நிறைவேறுவதற்கு ஆயத்தமானார் கோபாலகிருஷ்ணன். எப்படி ஷாஜகான், தன் மனைவி மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டியது போல், கோபாலகிருஷ்ணனும் தன் மனைவி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு சொந்தமான நிலத்தில் 3 சென்ட் இடத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் கோவில் ஒன்றையும் கட்டி அதில் 3 அடி உயரத்தில் கற்பகவள்ளியை அம்மனாக பாவித்து உருவச் சிலையையும் வடித்தும், கும்பாபிஷேகத்திற்காக தயார் நிலையில் இருந்தார். தற்போது மனைவி இறந்து ஓராண்டு ஆகிறது. தனது முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழாவை முன்னிட்டு, மனைவிக்காக கோவில் கட்டி உன்னை சாமியாக கும்பிடுவேன் என்று மனைவியிடம் செய்த சத்தியத்தை நிறைவேற்றினார் கோபாலகிருஷ்ணன்.
இறந்தவரை வணங்கி மரியாதை செய்வதுதான் தமிழர்கள் பண்பாடு. அதுபோல் தினமும் இவர் மனைவியை வணங்கி வருகிறார். மனைவிக்கு சிலை அமைத்துள்ளார் என்கிற தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் வியப்புடன் வந்து பார்த்து செல்கின்றனர்.மனைவி இறந்த சில நாட்களில் துணை தேடும் காலத்தில், வாழும் காலத்தில் மனைவி காட்டிய அன்பை, பாசத்தை மறக்க முடியாமல், இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவரும் நிகழ்கால ஷாஜகானாக கோபாலகிருஷ்ணன் வாழ்கிறார் என்றால் அது மிகையல்ல.