தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா பாக்கெட்டுகள் இருந்ததும், அதை கடத்தி வந்தவர்கள் கார் விபத்தில் சிக்கிய உடன் தப்பி ஓட்டம்
ஓமலூர் அருகே விபத்தில் சிக்கிய காரில் தடை செய்யப்பட்ட பான் குட்கா இருந்ததை அடுத்து போலீசார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் பான் குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டியில் கண்டெய்னர் ஒன்று சேலம் மார்க்கத்தில் இருந்து கோட்டமேட்டுப்பட்டி பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குறுக்கு சாலையில் திரும்பிச் செல்ல முயன்றுள்ளது.
அப்பொழுது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி அதி வேகமாக வந்த ஒரு சொகுசு கார் கண்டெய்னர் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விபத்து ஏற்படுத்திய காரை சோதனை செய்தனர்.
அப்பொழுது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா பாக்கெட்டுகள் இருந்ததும், அதை கடத்தி வந்தவர்கள் கார் விபத்தில் சிக்கிய உடன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து தப்பியோடியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.