BREAKING NEWS

தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவித்ததற்கு அரசியல் மட்டுமே காரணம்

தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவித்ததற்கு அரசியல் மட்டுமே காரணம் – தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி…

கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,

‘தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2026 தேர்தல் வியூகத்தின் அடிப்படையில், இயக்கத்தில் பொறுப்புகளில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று கோவை மண்டலத்தின் மறுசீரமைக்கப்பட்ட இயக்க நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது.

நேற்று சென்னை மண்டலத்தில் இதனை துவங்கினேன். நாளை காலை மதுரை மண்டல கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை திருச்சி மண்டல கூட்டம் நடைபெறுகிறது.

நான்கு மண்டல கூட்டங்கள் நாளையோடு நிறைவடைகிறது. இந்த கூட்டத்தின் நோக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் செயல்படுவதற்கான பணிகளை, இயக்க வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக இந்த மறுசீரமைப்பு மற்றும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட தலைமை என மாற்றி மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிற கட்சிகளும் இதே நிலைப்பாடு எடுத்து தான் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மறுசீரமைப்பில் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர் அணியை வலுப்பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நான்கு மண்டலங்களை பிரித்து நான்கு தலைவர்களை அறிவித்துள்ளோம். எல்லா மண்டலத்திலும் இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

இதேபோல் மகளிர்க்கும் இளைஞர் அணியில் முக்கிய பதவிகள் கொடுத்துள்ளோம். விவசாய அணி, வர்த்தக அணி உட்பட ஏராளமான அணிகளுக்கு இளைஞர்களை நியமித்துள்ளோம்.

மூன்று தலைமுறைகளுக்கு சொந்தமான கட்சியாக இது உள்ளது. நேர்மை, எளிமை, தூய்மை என்ற அடிப்படையில் செயல்படுவதால் எங்களுக்கு பொருளாதார நெருக்கடி உள்ளது. தங்களது சம்பாத்தியத்தில் கட்சிக்கு நிர்வாகிகள் வலு சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,

நிதி ஆயோ கூட்டத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு குறைகளை நிறைவாக்குவார் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதல்வருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவிதமாக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிய தமிழக முதல்வராக உள்ளார்.

முதல்வர் பேசும்போது மதுரை எய்ம்ஸ் பற்றி பேசுகிறார், மெட்ரோ ரயில் திட்டம் பற்றி பேசுகிறார். இவற்றுக்கு வரும் நாட்களில் மத்திய அரசு நிதி ஒதுக்கும் என நம்புகிறோம். அது அவர்களது கடமை.

ஆனால் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் அமர்ந்து நேரடியாக கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்ததற்கு காரணம் அரசியல் வாக்கு வங்கி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நிதி ஆயோக் கூட்டம் என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடக்கக்கூடிய ஒன்று. அதில் தமிழகத்தின் அழுத்தமான ஆலோசனைகளை, தேவைகளை எடுத்து கூறக்கூடிய ஒரே பிரதிநிதி முதல்வராகத்தான் இருக்க முடியும். அதை அவர் செய்ய தவறிருக்கிறார். இதில் அரசியல் செய்ய கூடாது. நிதி ஆயோக்கில் அரசியல் தேவையில்லை.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு செல்கிறார். ஜார்க்கண்ட் முதல்வர் செல்கிறார். தனது மக்களுக்காகவும் மாநிலங்களுக்காகவும் அவர்கள் செல்கின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தாவிற்கும் மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடு அதிகமாகவே உள்ளது. இருந்தும் கூட்டத்தில் கலந்து கொண்டார். எனவே மக்கள் பிரச்சனையில் அரசியல் புகுத்த கூடாது. நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழக மக்களுக்கு உங்களது கடமையை நீங்கள் செய்யவில்லை என குற்றம் சாட்டுகிறோம்.

எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு பாகுபாடு இன்றி நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது. அதை தாண்டி எந்தெந்த திட்டங்களுக்கு அதிகம் தேவையோ அந்தத் திட்டங்களுக்கு படிப்படியாக எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு பட்ஜெட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டு அனைத்து மாநிலத்திற்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அது பாஜகவிற்கு மட்டுமல்ல காங்கிரஸ்க்கும் சாத்தியமில்லை. இதற்கு முன்பு இருந்தவர்களும் இதை செய்ததில்லை.

திமுக இன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு காரணம் முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது தப்பு எனும் மக்களின் கருத்தை மறக்கக்கூடிய வகையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்’ என்றார்.

மேலும் பேசியவர், கட்சியில் மறுசீரமைப்பு நடந்துள்ளது. கட்சியில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். மீண்டும் அனைவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் பிரதமர் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லரசாக செயல்படும் மத்திய அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றக்கூடிய நல்ல சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு பெரும்பாலான மக்கள் இந்தியாவில் வாக்களித்துள்ளனர். எனவே பலமான தமிழகமும், வலிமையான பாரதமும் ஏற்பட பிரதமர் தலைமைக்கு தமிழக கட்சிகள் துணை நின்று வளமான தமிழகத்தை உருவாக்க 2026 இல் வழி வகுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.

மின் கட்டண தொடர்ந்து மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட கொங்கு மாவட்டங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. சிறு தொழில்கள், கைத்தறிவு, விசைத்தறி போன்றவை மிகப்பெரிய அளவில் மின்சார கட்டண உயர்வால் பாதிப்படைந்துள்ளன. எனவே, மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கீழ்பவானி பாசன பகுதியில் எல்பிபி வாய்க்கால் பணிகளை சீரமைத்து ஒவ்வொரு ஆண்டு போல் இந்த ஆண்டு 15ஆம் தேதி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

எல் அண்ட் டி பைபாஸ் சாலை ஆறு வழிச்சாலையாக விஸ்தரிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என தாமாக கேட்டுக்கொள்கிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றி முறையாக சரியாக உண்மை நிலையை வெளிப்படுத்தி மாணவர்களுக்கு எந்தவித அசௌகரியம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை’ என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS