தமிழ்நாடு
காரமடை அரங்கநாதர் கோயிலில் 17ம் தேதி தேர்த்திருவிழா-கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில். இக்கோயிலில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கிராம சாந்தி நடைபெற்றது.தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவரான அரங்கநாத சுவாமிக்கு திருமஞ்சன பூஜை நடத்தப்பட்டது.ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கொடிமரத்திற்கு கீழ் வீற்றிருக்கும் கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி யாகசாலை மண்டபத்தில் தொடங்கியது. திருமலை நல்லான் சக்கரவர்த்தி சுவாமிகள்,வேத வியாசர்கள்,சுதர்சன பட்டர் சுவாமிகள், ஸ்ரீதர் பட்டர் சுவாமிகள், மற்றும் கோயில் அர்ச்சகர்கள் கருடாழ்வர் சின்னம் பதித்த கொடிக்கு வேதமந்திரங்கள் ஓத சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதன்பின்னர் வேத கோஷங்கள் முழங்க, கோவில் உள்பிரகாரம் வலம் வந்து காலை 10.15 மணிக்கு கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பதித்த கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் ரங்கா ராமா, கோவிந்தா, கோபாலா என கோஷமிட்டனர். இந்நிகழ்ச்சியின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. இரவு 8.30 மணிக்கு அன்ன வாகன உற்சவம் நடைபெற்றது.
15ம் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பும், 16ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 18ஆம் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 19ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழாவும், 20ம் தேதி உற்சவ பூர்த்தி விழாவும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தாசர்கள் முக கவசம் அணிந்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.