தலைப்பு செய்திகள்
பயணம் செய்தால் பரிசுக் கூப்பன்: ‘ஆஃபர்க’ளை அள்ளிவீசிய சென்னை மெட்ரோ..!!
கரோனா பரவலுக்குப் பின்பு குறைக்கப்பட்ட சென்னை மெட்ரோ சேவையின் இயக்கம், நாளை முதல் இரவு 11 மணிவரை வழக்கம்போல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் அதிகளவில் பயணிகளை ஈர்க்கும்வகையில் ஆஃபர்களை அள்ளிவீசியுள்ளது சென்னை மெட்ரோ.
இதுகுறித்து சென்னை மெட்ரோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயிலில் 10.50 கோடி பயணிகள் இதுவரை பயணித்துள்ளனர். தொடர்ந்து மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஆதரவு அளிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும்விதமாக நாளை முதல் சில புதுத்திட்டங்கள் அமலுக்கு வருகின்றன. அதன்படி ஒருமாதத்தில் அதிக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா 2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுக்கூப்பனோ அல்லது பொருளோ வழங்கப்படும். கூடுதலாக மேலும் 30 நாட்களுக்கு விருப்பம் போல் அவர்கள் பயணம்செய்ய, பயண அட்டை வழங்கப்படும். இதேபோல் மாதாந்திர பரிவர்த்தனைக்கு 1,500 ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி 10 பயணிகளுக்கு 2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். அதேபோல் பயண அட்டை வாங்கிய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து மாதாந்திர குலுக்கல் நடத்தி, அதில் குறைந்தபட்சமாக ரூபாய் 500-க்கும், டாப் அப் செய்திருந்தால் 1,450 ரூபாய் மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும், 2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், “உள்ளூர், மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் மின்சார ரயிலின் டிக்கெட்டை எழும்பூர், சென்ட்ரல், கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே பெறும்வசதி உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும்” என்று சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.