தலைப்பு செய்திகள்
மணிப்பூரில் திருப்பம்: ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தும் நபர்தான் முதல்வரா?
மணிப்பூர் முதல்வர் பதவி யாருக்கும் எனும் போட்டியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் முந்தைய முதல்வர் என்.பீரேன் சிங்குக்கும், அமைச்சராக இருந்த பிஸ்வஜித் சிங்குக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கெனவே, இருவரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) டெல்லி சென்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், நேற்றும் டெல்லியில் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து இருவரும் பேசினர். இந்த முறையும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இருவரும் இன்று மணிப்பூர் திரும்புகின்றனர்.
இந்நிலையில், இந்த இருவரைத் தாண்டி இன்னொருவரின் பெயரும் பேசப்படுகிறது. அவர், ஆர்எஸ்எஸ் ஆதரவைப் பெற்றவரும், முந்தைய பாஜக அரசில் சபாநாயகராக இருந்தவருமான யும்னாம் கேம்சந்த் சிங். அவரையும் நேற்று பாஜக தலைமை அழைத்துப் பேசியிருக்கிறது.
பீரேன் சிங், பிஸ்வஜித் சிங் இருவரில் யார் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மணிப்பூர் பாஜகவுக்குள் விரிசல்கள் ஏற்படும் எனக் கருதப்படும் நிலையில், இருவரையும் தவிர்த்துவிட்டு யும்னாம் கேம்சந்த் சிங்கை முதல்வராக்கிவிடலாம் எனக் கட்சித் தலைமை யோசிப்பதாகத் தெரிகிறது.
மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ இருவரும் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் எனும் முறையில் மார்ச் 18 அல்லது மார்ச் 19-ல் மணிப்பூர் சென்று 32 எம்எல்ஏ-க்களுடன் தனித்தனியாகப் பேசுவார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தப் பயணம் ஒத்திப்போடப்பட்டு இன்றுதான் அவர்கள் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்குச் செல்கின்றனர்.
2017 மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்ற நிலையில், என்.பீரேன் சிங் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 வரை காங்கிரஸிலும் அதற்கு முன்னர் ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியிலும் இருந்தவர் அவர். அந்தத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்த பிஸ்வஜித் சிங்குக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கட்சியில் நீண்டகாலம் அங்கம் வகிக்கும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. சென்ற முறை கைநழுவிய வாய்ப்பை இந்த முறை எப்படியேனும் கைப்பற்ற வேண்டும் எனும் முனைப்பில் பிஸ்வஜித் இருக்கிறார். இந்தச் சூழலில் பாஜக தலைமை மிகக் கவனமாகக் காய்நகர்த்திவருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.