தலைப்பு செய்திகள்
கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும் – காவல் துறையினருக்கு எடப்பாடி எச்சரிக்கை!
காவல் துறையினர் நடுநிலையோடு செயல்படுங்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். நான் இப்போது இருக்கின்ற பொம்மை முதலமைச்சர்போல் இருக்க மாட்டேன். எந்தக் காரியம் எடுத்தாலும் துணிச்சலோடு எடுப்பேன். என் கை மண்வெட்டி பிடித்த கை. நான் மிகவும் கரடு முரடானவன் எனக் காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 51 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களை ஆதரித்து காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (பிப்ரவரி 9) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ”திமுக பொறுப்பேற்றுள்ள இந்தக் காலத்தை நாம் இருண்ட காலம் என்றே சொல்ல வேண்டும். திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேறவில்லை. எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஓர் விளம்பரப் பிரியர். எந்தச் செய்தித்தாளிலும் அவர் படம்தான் வர வேண்டும், எந்தத் தொலைக்காட்சியிலும் அவர் செய்திதான் வர வேண்டும் என்ற விளம்பரப் பிரியத்தில்தான் அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
மக்களுக்கு எவ்வித நலத்திட்டத்தையும் செய்யவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணையில் கொண்டவரப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தல், அடிக்கல் நாட்டுதல் போன்ற பணிகளை மட்டுமே இந்த ஒன்பது மாத காலத்தில் அவர்கள் செய்துவருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதலமைச்சராக ஆன பின்பு எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டுவரவில்லை.
காவல் துறையினருக்கு எச்சரிக்கை:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. மக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று காவல் துறை உயர் அலுவலர்கள் மிரட்டுகிறார்கள்.
நான் காவல் துறைக்கு எச்சரிக்கைவிடுக்கிறேன், காவல் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். நானும் முதலமைச்சராக இருந்தேன். காவல் துறையை நிர்வகித்தேன். அப்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.
இன்றைய தினம் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபடும் சூழல் இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்.
அரசு உங்களைக் காப்பாற்றாது!
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும். இல்லாவிட்டால் திமுக அரசு உங்களைக் காப்பாற்றாது. திமுக அரசை நம்பி இறங்கினால் உங்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும், அப்படி வரும்போது ஜனநாயகத்துக்குப் புறம்பாக எந்தக் காவல் துறை அலுவலரும், அரசு அலுவலரும் செயல்பட்டால் நிச்சயம் அதற்கான பலனை அடைவார்கள்.
நான் இப்போது இருக்கின்ற பொம்மை முதலமைச்சர்போல் இருக்க மாட்டேன். எந்தக் காரியம் எடுத்தாலும் துணிச்சலோடு எடுப்பேன். ஆகவே, காவல் துறை அலுவலரானாலும் சரி, அரசு அலுவலரானாலும் சரி, நேர்மையுடன் செயல்படுங்கள். என் கை மண்வெட்டி பிடித்த கை. நான் மிகவும் கரடு முரடானவன்” எனப் பேசினார்.