BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?

‘தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை அதிகரித்து வழங்கப்படும்’ என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை முதல்வரான பின் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என மாற்றுத்திறனாளிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தமிழக நிதிநிலை அறிக்கையில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகாததால் மாற்றுத்திறனாளிகள் ஏமாந்து போனார்கள். இந்த நிலையில்தான், உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சென்னையில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஏராளமானோர் காவல்துறையால் கைதும் செய்யப்பட்டனர்.

இதன்பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், “நிதிநிலையைப் பொறுத்து, படிப்படியாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்தார். இதனால் மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் கைவிடப்பட்டது. தமிழகத்தில் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு பதிவு செய்துள்ளனர். ஆனால், 6 லட்சம் பேருக்குத் தான் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழத்தில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த அளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அத்துடன் நிதி வழங்குவதில் பல துறைகளின் தலையீடு உள்ளதாகவும், கடுமையான விதிகள் காரணமாக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

எஸ்.நம்புராஜன்

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜனிடம் பேசினோம். அவர் கூறுகையில், “இந்தியாவில் தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை அதிகம் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திராவில் மாதம் 3 ஆயிரம் ரூபாய், தெலங்கானாவில் மாதம் 3016 ரூபாய், புதுச்சேரியில் மாதம் 2500 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 1000 ரூபாய் தான் வழங்கப்பட்டு வந்தது. நேற்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக அந்த தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்துள்ளார்” என்று கூறினார்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நிதி உதவி பெறுவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று அவரிடம் கேட்டதற்கு, “தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென 2010-ம் ஆண்டு தனித்துறை உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த துறையின் கீழ் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படவில்லை. இத்துடன் சமூநலத்துறை, வருவாய்த்துறை சேர்ந்து நிதி வழங்குவதால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த குழப்பம் கிடையாது. அத்துடன் சமூநலப்பாதுகாப்பு திட்டம் மூலம் நிதி பெற மாற்றுத்திறனாளிகளுக்கு 18 வயது ஆக வேண்டும் என்ற மோசமான விதி உள்ளது. 18 வயதுக்குள் யாருக்கும் ஊனம் ஏற்படாதா? இந்த விதி மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் விரோதமானது. மேலும் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள், தசை வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், 75 சதவீத உடல் ஊனமுற்றவர்களுக்கு மாதம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் ஏராளமானோர் இந்த ஐந்து வகை பாதிப்பிற்கு உட்பட்டவர்கள் தான். அவர்களைக் கண்டறிந்து இந்த நிதி உதவி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ” இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நிதியை விரையாமாக்கும் திட்டங்களை முறைப்படுத்தினாலே தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஒதுக்கிய நிதி போய் சேரும்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )