தலைப்பு செய்திகள்
என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?
அதிமுகவில் சசிகலாவைச் சேர்ப்பதா, வேண்டாமா என்ற கேள்விக்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலைத் தந்துவிட்டார். “சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை” என்பதுதான் அந்த பதில். இதன் மூலம் பல மாதங்களாக அதிமுகவிற்குள் நடந்த விவாதத்திற்கான விடை கிடைத்துள்ளது. ஆனால், அதிமுகவிற்குள் நடத்தப்பட்ட விவாதம் அது மட்டும் தானா? பலமில்லாத நிலையில் உள்ள அதிமுக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி வெற்றிப் பெற போகிறது என்ற கேள்விக்குப் பதில் எங்கே?
“தமிழகத்தில் மோடி அல்ல, இந்த லேடி தான்’ எனச்சொல்லியே வெற்றி பெற்ற ஜெயலலிதாவிடம் இருந்த ‘தில்’, இன்று உள்ள தலைமையிடம் இல்லை என்பதை அதிமுக தொண்டர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டில் அதிமுக தோல்வியடைந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும் வார்டிலும் அதிமுக தோல்வியடைந்தது. ‘குடியிருக்கிற வார்டிலேயே கட்சியை ஜெயிக்க வைக்க முடியாதவங்க, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவை எப்படி ஜெயிக்க வைப்பாங்க ?” என்ற அதிமுகவினரின் கேள்வியை அவ்வளவு எளிதாகப் புறந்தள்ள முடியாது.
தமிழகத்தில் நடைபெற்ற எத்தனையோ தேர்தல்களில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தாலும், மீண்டு எழுந்த வரலாறு உண்டு. அப்போது ஆளுமைமிக்கத் தலைவர்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தனர். அவர்கள் மக்களின் மனம் கவர்ந்தத் தலைவர்களாக இருந்தனர். ஆனால், இன்று இருக்கும் அதிமுக இரட்டைத்தலைவர்களுக்கு மக்களிடையே அப்படியான ‘கிரேஸ்’ இல்லை என்று அதிமுகவினர் கூறுவதை ஏற்காமல் இருக்க முடியாது. ஆளுமை என்பதைவிட அதிமுக தலைவர்களிடம் ஒற்றுமையில்லாததுதான், கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருவதற்குக் காரணம் என்று அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து திமுகவின் வாக்கு வங்கி அதிகரித்து வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.