தலைப்பு செய்திகள்
மின்சார வாரிய வரலாற்றில் உச்சபட்ச தேவையாக நேற்று 17,106 மெகாவாட் வழங்கி மின்சார வாரியம் சாதனை:

தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் உச்சபட்ச தேவையாக நேற்று 17,106 மெகாவாட் வழங்கி மின்சார வாரியம் பூர்த்தி செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முன்னெடுப்புகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி, பாராட்டுகள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி தலைமையில் துறையின் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் செந்தில் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 10 மாத காலத்தில் வட்டி குறைப்பு உள்ளிட்ட சீா்திருத்தங்களால் தமிழக மின்சார வாரியத்துக்கு ரூ.2,200 கோடி அளவு சேமிப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும், செலவை குறைக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 98,157 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவா்களுக்கு இன்னும் இரு தினங்களில் மின் இணைப்பு அளிக்கப்பட்டு விடும். 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோடை காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி, மின் உற்பத்திக்கு தேவைப்படுகிறது. ஒன்றிய அரசு 50 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே தரும் நிலையில், முதல்கட்டமாக 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக டெண்டா் விடப்படவுள்ளது. நிலக்கரி விலை சா்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில், வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 2006 – 2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலைய திட்டப்பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து உற்பத்தி தொடங்கும். வரும் செப்டம்பா் மாதத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும். பழுது நீக்க செல்லும் மின் வாரிய ஊழியா்கள் நுகா்வோரிடம் எதையும் கேட்கக் கூடாது. இது குறித்து புகாா்கள் வந்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
