தலைப்பு செய்திகள்
விமானத்தில் வந்து வாக்களித்த இளைஞர்.
அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த தொழிலதிபர் ஒருவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்களித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் ஷெரீப். இவர் அமெரிக்காவில் சொந்தமாக தகவல் தொழில் நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார். இதனிடையே, தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்த ஷெரீப், முன்கூட்டியே விமான டிக்கெட் எடுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து விமானம் இன்று சென்னை வந்த அவர், தனது சொந்த ஊரான காஞ்சிபுரம் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். “வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்று ஷெரீப் கேட்டுக் கொண்டார்.
இதேபோல், கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த ஆண்டனி ரோசல் என்பவர் மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆண்டனி ரோசல் மும்பையில் இருந்து விமான மூலம் இன்று கோவை வந்தார். அவர், ரேஸ்கோர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு தனது குழந்தையுடன் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தாா்.