தலைப்பு செய்திகள்
தமிழ்நாட்டில் 60.70% வாக்குகள் பதிவு..! சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக குறைந்த அளவாக வாக்கு பதிவு
சென்னை: சென்னை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது மிக குறைந்த அளவாக 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. இதில், உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் சென்னையில் தான் மிகக்குறைந்த அளவாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளும், மூன்று மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதுவரை நடந்த முடிந்த தேர்தல்களில் 50 சதவீதத்தை தாண்டியே வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 52.67 சதவீத வாக்குகளும், அதே ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயருக்கான வாக்குப் பதிவில் 52.67 சதவீத வாக்குகளும் பதிவாகின. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகிய நிலையில், நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகக்குறைந்த அளவாக 43.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது.
இத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதற்கு காரணம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்வதற்கான நோட்டா வசதி இல்லாததே என கூறப்படுகிறது. மேலும், 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 61.85 சதவீத வாக்குகள் பதிவாகியது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 60.47 சதவீதமும், 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 59.01 சதவீத வாக்குகளும் பதிவாகியது.
CATEGORIES Uncategorized