தலைப்பு செய்திகள்
தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்ப்பது நியாயமற்றது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
