தலைப்பு செய்திகள்
நிலம் மற்றும் வீட்டினை விற்று மோசடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா.
நிலம் மற்றும் வீட்டினை விற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார்.
பசுவந்தனை அருகே உள்ள வடக்கு கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி சண்முகசுந்தரம்மாள் (85). கணவர் முனியசாமி இறந்து விட்ட நிலையில் சண்முகசுந்தரம்மாள் தனியாக வசித்து வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமாக வடக்கு கைலாசபுரத்தில் 6 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளது. இந்நிலையில் இந்த இடம் மற்றும் வீட்டினை சண்முகசுந்தரம்மாளின் உறவினர் ஒருவர் அவரிடம் ஏமாற்றி கையெழுத்து வாங்கி வேறொருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த சண்முகசுந்தரம்மாள், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையெனத் தெரிகிறது. இந்நிலையில் வீடு மற்றும் நிலத்தினை மீட்டு தரக்கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் வந்த அவர், அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அவரிடம் கோட்டாட்சியர் உதவியாளர் இசக்கிராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சண்முகசுந்தரம்மாள், ஏமாற்றியவரிடமிருந்து நிலம் மற்றும் வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்று மனுக் கொடுத்தார்.
இதுதொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உதவியாளர் கூறியதையடுத்து மூதாட்டி சண்முகசுந்தரம்மாள் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.