BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பிரியாணி கடைக்காரர் வீட்டில் 31 சவரன், 1 லட்சம் திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது

பிரியாணி கடைக்காரர் வீட்டில் 31 சவரன், 1 லட்சம் திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது

 

தண்டையார்பேட்டை: மண்ணடி முத்து மாணிக்கம் தெருவை சேர்ந்தவர் முனவர் (27). அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நசீம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த குட்டு பாண்டே ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் முனவர் வீட்டின் 3வது மாடியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி ராயபுரத்தில் நடைபெற்ற தங்கை திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முனவர் குடும்பத்துடன் சென்றிருந்தார். பிரியாணி கடையை ஊழியர்கள் கவனித்தனர். அன்று இரவு வியாபாரம் முடிந்து ஊழியர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது முனவர் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், ₹1 லட்சத்து 20 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், எஸ்பிளனேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில், பக்கத்து வீட்டை சேர்ந்த யாஸ்மின் பேகம் (44) என்பவர், முனவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்து 31 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருள்கள், ₹1 லட்சத்து 20 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட யாஸ்மின் பேகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு உடந்தையாக யாராவது இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )