தலைப்பு செய்திகள்
இன்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை! அதிகரிக்கும் கொரோனா?! மீண்டும் ஊரடங்கா?!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். கடந்த சில நாட்களாகவே சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மார் 31க்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஆனால் கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம், மீறினால் அபராதம் போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பிரதமர் ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டு மக்களிடையே இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலும் தொடர்ந்து சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 25ம்தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல்வரின் இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம் குறித்த அறிவிப்பு பல்வேறு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டி.யில் 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகவலை டாக்டர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத தினமாக கடந்த 12ம் தேதி கொண்டாடப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மீண்டும் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி, கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால், ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மாநில அரசு, கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்த முக்கிய ஆலோசனைகளும், தொற்று பரவலைத் தடுக்க புது யுக்திகளும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விரைவில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட இருப்பதால், சுற்றுலா தலங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். கொரோனா தொற்று பரிசோதனை முறைகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
