தலைப்பு செய்திகள்
சுயேச்சை வேட்பாளரின் தில்லாலங்கடி வேலை. அதிர்ந்துபோன வாக்காளர்கள்.
திமுகவில் சீட் கொடுக்காததால் சுயேச்சையாக போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களை கவருவதற்காக போலி தங்க நாணயம் கொடுத்து ஏமாற்றியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் ஆம்பூரில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் மணிமேகலை துரைபாண்டியன். அதிமுகவை சேர்ந்த இவர், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என்று காத்திருந்த மணிமேகலைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால், சுயேச்சையாக களமிறங்கினார் மணிமேகலை.
36வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தென்னைமரம் சின்னத்தில் நின்றார். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முடிவில் இருந்த மணிமேகலை, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, வாக்குகளை கவருவதற்காக தங்க நாணயம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பலரும் மணிமேகலைக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிலர் தங்க நாணயத்தை அடகு வைக்க சென்றுள்ளனர். அப்போது, சோதித்துப் பார்த்தபோது அது போலி தங்க நாணயம் என்று தெரியவந்துள்ளது. இதனால், மணிமேகலைக்கு வாக்களித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து எந்த புகாரும் காவல்துறையில் கொடுக்கப்படவில்லை. வாக்குக்கு பணமோ, பரிசு பொருட்களோ வாங்கினால் இதுபோன்றுதான் நடக்கும் என்று எச்சரித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.