தலைப்பு செய்திகள்
நாளை முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுக்கும் பணி துவங்க இருக்கிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் பணிகள் நிறைவடைந்து அவை பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரு முனை பிரச்சாரம், மும்முனை பிரச்சாரம் எல்லாம் கிடையாது. உள்ளாட்சி தேர்தல் என்பதால், 7 முனை, 8 முனை என நிறைய கட்சிகள் தனித்தே களமிறங்குகிறார்கள். இதில், உள்ளூரில் செல்வாக்குமிக்கவர்கள், பிரபலமானவர்கள், கட்சி வேட்பாளர்களை கதி கலங்க செய்து, தனியாகவே ஆவர்த்தனம் செய்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதன் படி நாளை பிப்ரவரி 12ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வீடுகளுக்கே நேரடியாக சென்று பூத் சிலிப் வழங்கப்படும். பூத் ஸ்லிப் வாங்குவதில் இருந்து விடுபட்டவர்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகே பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..