தலைப்பு செய்திகள்
2 நாள்களுக்கு மட்டுமே உணவு. ஏடிஎம்-ல் பணம் எடுக்க முடியல..- உக்ரைனில் இருந்து பேசிய செஞ்சி மாணவர்.
உக்ரைனில் மருத்துவம் படிக்கும் தனது மகனை இந்தியா அழைத்துவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த மாணவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலி வேலை செய்து வருகிறார். மனைவி விஜயலட்சுமி தையல் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் முத்தமிழன் (26). தற்போது உக்ரைனில் நாட்டில் வெனிடாஸ் மாகானத்தில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் மாணவர் முத்தமிழன் நாடு திரும்ப திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட முத்தமிழன் அங்குள்ள சூழ்நிலை குறித்து தந்தை சேகரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள சூழல் குறித்து முத்தமிழன் விடியோவாக அனுப்பியுள்ளார். இதுகுறித்து உக்ரைனில் படிக்கும் மாணவரின் தந்தை சேகர் கூறுகையில், “தனது மகன் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே குண்டு வெடித்து அதன் அதிர்வை உணர்ந்ததாக கூறினார்.
மேலும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவு கிடைக்கும் சூழல் இருப்பதாகவும், எடிஎம்-ல் பணம் எடுக்க முடியாத சூழல் உள்ளதால் விடுதியிலேயே முடிங்கியிருப்பாத தெரிவித்துள்ளார். என் மகனுடன் தமிழகத்தை சேர்ந்த 150 மாணவர்கள் படித்து வரும் சூழலில் அனைவரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.