தலைப்பு செய்திகள்
“அதிமுக என்ற சிங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது” – ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு!
திமுக அரசு பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சிகள் அச்சுறுத்துவதாகவும், அதிமுக என்ற சிங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுக சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டு, பேசியதாவது- அதிமுக மறைந்த புரட்சி தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, 13 ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்றது. ஏழைகளின் கண்ணீரை துடைத்தவர் எம்ஜிஆர். அவரது வழியில் ஜெயலலிதா எண்ணற்ற நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். எனவே, அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கழகத்தை யாராலும் அழிக்க முடியாது. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இன்று அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நமது வாக்குகள் 10% அங்கு சென்று உள்ளது. ஆனால் ஒரே ஆண்டிலேயே, அவர்களுக்கு வாக்களித்தவர்கள், தங்களது தவறை உணரும் சூழ்நிலை உருவாகும். அதிமுகவை பொறுத்தவரை கடைநிலை தொண்டன் முதல் தலைவர்கள் வரை என்றும் மக்களுக்கு பாடுபடுவார்கள். அவர்கள் மீது எந்த பொய் வழக்கு புனையப்பட்டாலும், அவர்கள் சந்திக்க தயாராக உள்ளனர். கடந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியின்போது பொய்வழக்கு யார் மீதும் புனையை படவில்லை. ஆனால், தற்போது பொய் வழக்குகள் போடப்பட்டு, எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தப்படுகின்றன. ஆனால், எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க கழகம் தயாராக உள்ளது. அதிமுக என்ற சிங்கத்தை யாரால் வீழ்த்தவே முடியாது இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பண்ணன் பேசியதாவது – எவ்வாறு சாலையின் மேடு, பள்ளங்கள் இருக்கிறதோ அதே போன்று ஒரு அரசியல் கட்சிக்கு வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. எம்ஜிஆர் 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். அதன்பிறகு ஜெயலலிதா 5 முறை முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தார். இன்று கூட மக்களுக்கு அதிமுக ஆட்சியின் மீது எந்த வருத்தமும் இல்லை. ஆனால் சில சூழ்நிலைகள் குறிப்பாக ஆளுங்கட்சியின் பொய் வாக்குறுதிகள் காரணமாக தற்போது அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது, திமுகவுக்கு 14 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், இப்போது நமக்கு 19 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோன்று, சட்டமன்றத்திலும் நாம் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம். எனவே இந்த தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல. 50 சதவீத மேற்பட்ட உள்ளாட்சி இடங்களில் 25 வாக்குகளுக்கு குறைவாகவே அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். ஆனால் நமது ஆட்சியில் எந்த எதிர்க்கட்சியை மீதும் அடக்கு முறையை நாம் கண்டதில்லை. ஆனால் தற்போது ஆளுங்கட்சியினர் அடக்கு முறையை கையாளுகின்றனர். அந்த அடக்குமுறையை எல்லாம் சமாளித்து நாம் மீண்டும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் பிசி ராமசாமி, எம்எல்ஏ ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ-க்கள் தென்னரசு, ஈஸ்வரன், பூந்துறை பாலு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி கழக செயலாளர்கள் மனோகரன், கேசி பழனிச்சாமி, கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீசன், முன்னாள் எம்பி செல்வகுமார சின்னையன், காளியப்பன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்து, மாணவரணி தலைவர் சிவக்குமார், இணைச்செயலாளர் யூனிவர்சல் நந்தகோபால், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீண்ராஜா,உட்பட பலர் கலந்து கொண்டனர்.