தலைப்பு செய்திகள்
ஆபரேஷன் கங்கா”.. உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க முன்வந்த இன்டிகோ!
உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள சூழலில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் தான் ரஷ்ய தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அச்சத்தில் அங்கு இருக்கும் இந்தியர்கள் சுரங்கத்தில் அமைந்திருக்கும் மெட்ரோ ரயில்களிலும் சுரங்கப்பாதைகளிலும் பதுங்கியுள்ளனர். அவர்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைப்பதில் கூட பெரும்பாடாக இருக்கிறது. காப்பாற்றுமாறு வீடியோ கால்களில் கதறுகின்றனர்.
அவர்களை மீட்கக்கோரி மாணவர்களின் பெற்றோரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரிக்கு இந்தியர்களை வரவழைத்து அங்கிருந்து மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர். முதற்கட்டமாக ஐந்து விமானங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
கொரோனா சமயத்தில் ஏர் இந்தியா அரசுக்குச் சொந்தமாக இருந்ததால் தனியார் விமான நிறுவனங்களில் தயவின்றி வந்தே பாரத் ஆபரேஷன் மூலம் அரசு இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்தது. ஆனால் ஏர் இந்தியா சமீபத்தில் தான் டாடாவின் கைகளுக்குச் சென்றது. இதனால் தனியார் விமான சேவை நிறுவனங்களை அரசு எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபரேஷன் கங்காவில் இணைய மத்திய அரசு தரப்பில் உதவி கோரப்பட்டது. அந்த வகையில் இன்டிகோ நிறுவனம் இந்த ஆபரேஷனில் இணைய முன்வந்துள்ளது. உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க இரு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இரு விமானங்களும் தலைநகர் டெல்லியிலிருந்து ருமேனியாவின் புக்கரெஸ்ட் மற்றும் ஹங்கேரியின் புடாபெஸ்ட் ஆகிய இடங்களுக்கு இஸ்தான்புல் வழியாக இன்று இயக்கப்படவுள்ளன. இதனிடையே இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ஹர்தீப் பூரி, சிந்தியா, கிரண் ரிஜிஜூ, விகே சிங் ஆகிய நான்கு அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் விரைவில் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என சொல்லப்படுகிறது.