தலைப்பு செய்திகள்
ஆவணங்கள் தேவையில்லை; ஆதார் கார்டு வழங்குவோம்.
பாலியல் தொழிலாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் உறுதி
பாலியல் தொழிலாளிகளுக்கு ஆவணங்கள் இல்லாமல் ஆதார் கார்டு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி சுகாதார துறை சார்ந்த உயர் அதிகாரிகள் வழங்கும் சான்றிதழ் அல்லது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரியிடமிருந்து சான்றிதழ் ஆகியவற்றின் அடிப்படையில் ஆதார் கார்டு வழங்கப்படும் என்று ஆதார் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் உணவின்றி கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது அடையாளச் சான்று கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் ஆதார் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையெடுத்து, நேற்று உச்ச நீதிமன்றத்தில் , பாலினத் தொழிலாளர்களுக்கு இருப்பிடம்/அடையாளச் சான்று வலியுறுத்தாமல், மாநில சுகாதாரத் துறையில் உயர் அதிகாரி அல்லது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி வழங்கும் சான்றிதழைப் பெற்றால், அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர். ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பாலியல் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெருந்தொற்றின்போது உணவு கிடைக்கவில்லை. அதை சரிசெய்ய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு அதிகாரிகள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகள் பாலியல் தொழிலாளர்களை அணுகுதல், அவர்களின் அடையாளங்கள் குறித்த தகவல்களை வெளியிடாமல் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை வழங்குவது என்பது குறித்த வாதங்களை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
”ஆதார் அட்டை இல்லாததால், பலருக்கும் உணவு போன்ற அடிப்படை உரிமைகள் கிடைக்காமல் இருப்பதை தடுப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது” என்று ஆதார் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவின் நிலை குறித்து மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் பட்டியல்களை சரிபார்த்த பிறகு அவர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை வலியுறுத்தாமல், மாநில அரசுகள் தொடர்ந்து உணவுகளை விநியோகிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பாலியல் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவது குறித்து பல மாநிலங்கள் தாக்கல் செய்த அறிக்கைகளை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், அந்த புள்ளிவிவரங்கள் உண்மையாக இல்லை; மாநிலங்கள் எண்ணிக்கையின் அளவை குறைத்து கூறியுள்ளன என்று கூறியுள்ளது. மேலும், மாநிலங்கள் அடுத்த மூன்று வாரத்திற்குள் பாலியல் தொழிலாளர்கள் குறித்து உண்மை தன்மையுடன் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.