BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் சந்தேகத்தின்பேரில் கணவர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை.

எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியில் சந்தேகத்தின்பேரில் கணவர் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி அருகே பணங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோடன்.

இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்தாண்டவனூர் பகுதியைச் சேர்ந்த முனியன் மகள் கௌசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹன்சிகா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே, திருமணமான சில மாதங்களாகவே கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் செங்கோடன், அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த கௌசல்யா, நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து, காலையில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்த மனைவியைக் கண்டு செங்கோடன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மனைவியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த கௌசல்யாவின் குடும்பத்தினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனையடுத்து, மருமகன் மீது சந்தேகமடைந்த கௌசல்யாவின் பெற்றோர் எடப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கௌசல்யாவின் உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்கோடன் வீட்டில் இல்லாதபோது வெறோரு நபருடன் கௌசல்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால், மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கணவர் செங்கோடனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )