தலைப்பு செய்திகள்
போரில் சிக்கி தவிக்கும் உக்ரைன் குழந்தைகள்.. களத்தில் இறங்கிய நடிகை எமி ஜாக்சன் !!
பிரபல நடிகை எமி ஜாக்சன் உக்ரைன் நாட்டு குழந்தைகளுக்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை எமி ஜாக்சன். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ஆர்யாவின் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் விஜய்யின் தெறி, ரஜினியின் 2.0, கெத்து உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
‘ஜார்ஜ் பனாயிட்டுவை நிச்சயம் செய்து அவருடன் வாழ தொடங்கியதும் சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்தார். தொழிலதிபர் ஜார்ஜ் பனாயிட்டுவை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சனுக்கு கடந்த 2019ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், மீண்டும் விளம்பர படங்கள், வெப்சீரிஸ் என கவனம் செலுத்தி வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆரம்பித்துள்ள போருக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளை மீட்க முடிவு செய்த அவர், அதற்கான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைனில் உள்ள குழந்தைகளின் நிலையை தன்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் களமிறங்கி உள்ளேன். அதற்கான நிதியை திரட்டி வருகிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என அதற்கான தகவல்களை தனது இன்ஸ்டாகிராமில் நடிகை எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார்.
அதோடுமட்டுமல்லாமல், உக்ரைன் மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற அறிவிப்புடன் அங்கே கஷ்டப்படும் குழந்தைகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை எமி ஜாக்சன் ஷேர் செய்துள்ளார். அதில், மருத்துவ உதவிக்காக போராடும் பிஞ்சுக் குழந்தையின் புகைப்படம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.